ஏற்றுக் கொள்ளப் படாத என் கொள்கைகள்!–2

                               குறைவல்ல, கூடுதலே பிரச்னை

@ போதுமான உணவின்றி பட்டினியால் இறப்பவர்களை விட அதிகம் பேர் மிகை உணவை ஏற்பதன் மூலம் வரும் இன்னல்களால் இறப்பதாகக் கூறப்படுகிறது. அது உண்மையாக இருக்கலாம். இன்றைய பல சிக்கல்களுக்கு மிகை தான் காரணம் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும். 

@ சில பத்தாண்டுகளுக்கு முன் வறுமை, பட்டினி, மற்றும் வேலை வாய்ப்பின்மை பல குடும்பங்களில் உச்சத்தில் இருந்தன. இப்போது அப்படி இல்லை. பட்டினிச் சாவு பழங்கதையாகிப் போனது. பிற இரண்டும் நம்முடைய பங்களிப்பு இல்லாமல் நீண்ட காலம் நம்மோடு உடனுறைய இயலாது. வறுமை நம்முடைய தேர்வு என்று சொல்லும் அளவுக்கு நிலைமை முன்னேறி உள்ளது.

@ முன்பு குறைவான வருமானம், விளைவாக குறைவான வசதிகள், அவை மூலம் பெறக் கூடிய இன்பங்களின் குறைவான அளவு மற்றும் எண்ணிக்கை பிரச்னைகளாக இருந்தன. இப்போது வாழ்க்கை பென்டுலம் நேர் எதிர்த் திசைக்கு சென்று விட்டது. பலருக்கு சுமாரான வாழ்க்கையாவது உறுதியாகியுள்ளது. சிலருக்கு என்ன செய்வது என்று திகைக்கும் அளவுக்கு வசதி பெருகியுள்ளது. அதனால் சில சிக்கல்களும் உருவாகியுள்ளன.

@ என் மனைவிக்கும் எனக்கும் தகராறு வர இன்னொரு காரணம் — மிளகாய். உணவில் ஒரு நாள்  திடீரென்று உறைப்புச் சுவை கடுமையாக எகிறியிருக்கும். நல்ல ஜோக் ஒன்றை ரசிக்க நேர்ந்தது போல் எனக்குக் கண்ணீர் மல்கும். (புரியவில்லை என்றால் நீங்கள் இன்னும் என் “வேதனையில் மட்டும்தானா கண்ணீர் வரும்? ”  என்ற கட்டுரையைப் படிக்கவில்லை என்று பொருள்.)

@ கண்ணீர் மல்க “கொஞ்சம் மொளவாயைக் கொறச்சுப் போடக் கூடாதா?” என்று கேட்பேன். அதற்கு ” புது மொளவா…. அதான்” என்று மனைவி கூறுவார்.சில அவசர யுக்திகளைக் கையாண்டு அன்றைய ப்ரச்னையை சமாளிப்பார். மறுநாள் சட்னியில் அதே அளவு உறைப்பு துளி கூட குறையாமல் அப்படியே இருக்கும். “என்ன, இன்னக்கிம் குறைக்கலயா?” “குறைச்சேனே” “என்னத்த கொறச்சே?” சிறிது நேரத்தில் இருவரும் மாறி மாறி ‘குரை’க்கத் தொடங்குவோம்.

@ நான்கு நாட்களுக்குப் பிறகு மிகை உறைப்பு நிலைமை சீரடையும். இதற்குள் உறைப்பில்லா உணவுக்கு நான் ஏங்கத் தொடங்கியிருப்பேன். ஒரு நாளைக்காவது உறைப்பே இல்லாமல் ‘சப்’பென்று சாப்பிட ஆவல் மிகும். இன்னும் ஐந்து சுவைகள் உணவில் உண்டு. எல்லாவற்றுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடாது. நான் அசந்தால் புது உப்பு, புது சர்க்கரை என்று சொல்ல முயன்று பார்ப்பார். எனக்கு ஓர் ஐயம். தவறுதலாக எப்போதுமே அதிகமாகத் தான் போட வேண்டுமா? தவறுதலாகக் குறைத்துப் போடக் கூடாதா? அதென்ன செலக்டிவ் தவறுதல், செலக்டிவ் அம்னீஷியா போல? கேட்டால் மௌனமே பதில்.

@ மற்றவர்கள் எப்படியோ, என் மனைவிக்கு உணவில் எதையும் குறைக்க மனம் வராது. மற்றவர்கள் எப்படியோ, எனக்கு சுவைகள் மிகச் சரியான அளவில் இருக்க வேண்டும். சிறிது குறைந்தால் கூட பரவாயில்லை; அதிகமாக இருக்கக் கூடாது. கெமிஸ்ட்ரி லேபில் டைட்ரேஷன் செய்வது போல துல்லியமாக இருக்க வேண்டும். துளி குறைந்தால் வண்ணம் மாறாது. சற்று கூடினால் ரிசல்ட் தவறாகும். 

@ காய்ச்சலின் போது அருந்த சுடுநீர் தருவார். நான் ” கொதிநீர் எதுக்கு? ஊசி எதும் ஸ்டெரிலைஸ் பண்ணப் போறோமா, என்ன? கொஞ்சம் சூடு போதும்” என்பேன். பின்னொரு நாள் மூத்த பேத்தி,”பாட்டி,எனக்கு டீ கொஞ்சம் சூடா, கொஞ்சம் ஸ்வீட்டா, கொஞ்சம் ப்ரௌனா வேணும்” என்ற போது அதன் முதுகில் ஒரு அடி விழுந்தது — கொஞ்சம் கடுமை குறைவோடு. என்றும் அடித்தறியாத பாட்டி இன்று செல்லமாக என்றாலும் ஏன் அடித்தார் என்று பேத்திக்குப் புரியவில்லை. எனக்குப் புரிந்தது. 

@ நன்றாக சமைக்கத் தெரியாதவர் என்றால், சரி, நமக்கு வாய்த்தது அவ்வளவு தான் என்று இருந்து விடலாம். என் மனைவி அற்புதமாக சமைப்பவர். “பேசாம இனிம நானே சமைக்கிறேன், எனக்கு சமையல் கத்துக் குடு” என்று பல முறை கேட்டு விட்டேன். இதுவரை கற்பித்தலைத் தொடங்கவே இல்லை. அதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

@ எதுவும் குறைந்தால் உணவின் ருசி குறையலாம்; ஆனால் அதனால் எந்த கெடுதலும் உடலுக்கு ஏற்படப் போவதில்லை. அதிகமானால் உணவில் சுவையும் குன்றும், உடல் நலத்துக்கு அதனால் கெடுதலும் உண்டாகும். இனிப்பு அதிகமானால் நீரிழிவு வரும். உப்பு அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் வரும். கொழுப்பு அதிகமானால் கொலஸ்ட்ரால் . உறைப்பு, புளிப்பு அதிகமானால் அல்சர் என்று பட்டியல் நீளும். புரதம் அதிகமானாலும் சில சிக்கல்கள். 

@ உணவில் சத்துக் குறைபாடும் நோய்களை அழைத்து வரும் என்பது உண்மையே. விட்டமின், புரதம், கேல்சியம், இரும்பு போன்ற சத்துகள் குறைந்தால் உடல் நலம் கெடும்.  ஆண்டு முழுவதும் சூரியனிடமிருந்து ஓசியில் விட்டமின்–டி கிடைக்கும் ஊரில் அதன் குறைபாடு நிறைய என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.  இப்போது அந்த சத்துக்கள் குறைவது கிடைப்பருமையால் அல்ல; நம் அறியாமையாலும், அக்கறையின்மையாலும். மைய நீரோட்டத்துடன் ஒட்ட ஒழுகல் ஆசையினாலும்.  பெண்களுக்கு  இன்றும் இரும்பு, சுண்ணாம்பு சத்துகள் போதாமை தொடர்கிறது. அதற்குக் காரணங்கள் வேறு சிலவும் உண்டு.

@ முன்பெல்லாம் வீட்டில் தேவைக்கு  சற்று அதிகமாகவே சமைப்பது வழக்கம். முன் தகவல் இன்றி ஒரு விருந்தினர் மதியம் ஒரு மணிக்கு வந்தால் கூட அவருக்கு உணவளிக்க முடியும். வெளியில் சொல்லாமல் பெண் தெய்வம் உண்டி சுருக்கும். மிஞ்சும் போது உணவை எறிந்து விடுவதில்லை. மாற்று யோசனை, இல்லா விட்டால் வீணாக்காமல் அவர்களே உண்பார்கள். இரண்டும் தவறு. குழந்தைகள், கணவன், பெரியவர்கள் என்று மேற்கொள்ளும் தியாகங்கள் வேறு. சத்துக் குறைபாடுகள், புதிய நோய்கள் பெண்களுக்கு வர சில காரணங்கள் இவை.

@ ஆந்திர மிகை உறைப்பு புகழ் பெற்றது. இங்கு டீயை பாயாசம் போல் சாப்பிட்டால் தான் முழு திருப்தி என்று ஜெயமோகன் சொல்வார். பால், நிறைய சர்க்கரை, ஏலக்காய் —-  டீயில் சேமியா மட்டும் சேர்ப்பதில்லை. கொஞ்சம் சர்க்கரையை அதிகம் போட்டுவிட்டால்  ‘அது’ கூட நன்றாக இருக்கும் என்று கிராமத்தில் சொல்வார்கள்.

@ உப்பு, உறைப்பு, புளிப்பு மூன்றும் சரியான அளவில் அமைந்து விட்டால் சமையல் சிறப்பாக இருக்குமாம். “இன்னிக்கு சாம்பார் சூப்பரா இருக்கே மூணும் சரியான அளவுல சேந்துடிச்சோ?” என்று கேட்டால் என் மனைவி “இல்ல. எல்லா காய்கறிகளும் இன்னிக்கு எளசா நல்லதா இருந்துச்சு”  என்று பதில் சொல்வார்.

@ தினம் பரிமாறுகையில் “இன்னும் ஒரு இட்லி சாப்பிடுங்க” என்று சொல்வார். “என்னால இன்னும் நாலு இட்லி சாப்பிட முடியும். ஆனா இந்த வயசுல சாப்பிடக் கூடாது.” என்று நான் தினம் மறுப்பேன். நாளடைவில் மனைவி மெல்ல அம்மாவாக மாறுகிறார். 

@ அம்மாக்கள் அறியாத அபாயம் இன்றைய குழந்தைகளின் “Obesity” ப்ரச்னை. பத்து வயதுப் பையன் தொப்பையோடு சிரமப் பட்டு நடப்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக இல்லை. “என் பையனுக்கு என்ன கொறச்சல்?” என்று பெருமை வேறு. குறைச்சல் இல்லை,அம்மணி, கூடுதல் தான் ப்ரச்னையே. டி.வி. பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி, சக்கை உணவு (Junk Food) அதுவும் மிகையாக. 

@ தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் இன்னும் கொஞ்சம் குறையுங்கள் என்று நடிகர்களிடம் மனதுக்குள் எவ்வளவு கதறியிருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் மலைகளுக்கு முன் நின்று கட்டளையிட  அசாத்திய துணிவும், வலுவான முதுகெலும்பும் தேவைப் பட்டிருக்கும். எந்தக் காலத்திலும் முதுகெலும்பு வாய்த்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். நடிப்பு சூப்பர் என்று சொல்வதன்றி அடுத்த வாய்ப்புக்கு வழியில்லை.

@ மிகை நடிப்பு அசிங்கம்; அளவான நடிப்பே அழகு. குறைவான நடிப்பு என்றால்  கூட ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங், இசை என்று அதை சரி செய்ய வழியுண்டு. இரண்டு நடிகர்களின் சில புகைப்படங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு புகழ் பெற்ற இயக்குநர் குறும் படம் ஒன்றை இயக்கினார் என்று அடூரிடம் படித்திருக்கிறேன். முகமும்,உருவமும் மட்டுமே தந்தால் போதும் என்ற நிலையிலிருந்த நடிகர்கள் பின்னர் இயக்குநரையும் அழுத்தி விட்டு சினிமாவில் முக்கிய இடம் பெற்றது ஒரு நகைமுரண் என்று சொல்வார்.

@ வண்ணத்தின் அடர்த்தி குறைவாக உள்ள போது வெளிப்படும் கண்ணியமான தோற்றம், அடர்த்தி கூடும் போது வெளிப் படுவதில்லை. மேலும் அது அருவெறுப்பையும் ஏற்படுத்தலாம். தூய வெண்மை பளிச்சிடும் வேஷ்டியும் சட்டையும் தரும் கம்பீரமே தனி. மிகை அடர்த்தி வண்ண ஆடையே கேலி செய்யப் படுகிறது.

@  பண/அதிகார மோகம், மத/இன/மொழி/கட்சி/கொள்கை பற்றுகள், அன்பு, காம இச்சை, பொறாமை போன்ற உணர்ச்சிகள் இவையெல்லாம் சற்று குறைந்தால் கூட பெரிய அழிவைத் தந்து விடாது. ஆனால் இவை மிகையாகிப் போனால் கொண்டவருக்கும் பிறருக்கும் அழிவை உறுதியாக உருவாக்கும். மிகை அமுதம் விஷம், குறைந்த அளவு விஷம் மருந்து என்பார்கள்.

@ அன்று காலை நகம் களைய அமர்ந்தேன். அறிவு வளர்கிறதோ, இல்லையோ, தாடை உரோமமும், நகங்களும் விரைந்து வளர்கின்றன.  என் மனைவி மெல்ல சொன்னார்: “இன்னிக்கி வெள்ளிக்கிழமை. நகம் வெட்டப்டாது. அது என்ன சொல்லி வச்ச மாதிரி வெள்ளியன்னிக்கி நகவெட்டிய எடுக்கிறீங்க. தவறுதலாகக் கூட வேற கிழமையில எடுக்கக் கூடாதா? அதென்ன செலெக்டிவ் தவறுதல்!” 

(தொடர்கிறது)

ஏற்றுக் கொள்ளப் படாத என் கொள்கைகள்!–1

Categories அனுபவம், கல்வி, திரைப்படம், நகைச்சுவை

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close