ஏற்றுக் கொள்ளப் படாத என் கொள்கைகள்!–1

                                      “அதத அதது எடத்துல வக்யணும்” 

@ தொடரின் தலைப்பில் ஒரு முக்கியமான சொல் விடுபட்டுப் போய் விட்டது. “வீட்டில்” என்ற சொல்லை தலைப்பின் முதலாவது சொல்லாக சேர்த்துக் கொள்ள வேண்டும். சுமார் நாற்பது ஆண்டுகளாக எவற்றை நான் திரும்பத் திரும்ப சலிக்காமல் சொல்லியும் வீட்டில் ஏற்றுக் கொள்ளப் படவில்லையோ அவற்றுக்கு கொள்கை என்ற அந்தஸ்தை நான் அளித்திருக்கிறேன். 

@ குறைந்தது இரண்டு வித போக்குகள் உண்டு. ஒன்று நாஞ்சில் நாடனுடையது. அடுத்தது ஜெயமோகனுடையது. நான் போக்குகள் என்று குறிப்பிடுவது இலக்கியப் போக்குகளையல்ல; வாழ்க்கைப் போக்குகளை. பயணத்தின் போது நாஞ்சில் பயன் படுத்தும் சூட்கேசில் எவை உள்ளன, எத்தனை உள்ளன, எந்த இடத்தில்  உள்ளன போன்ற எல்லா விபரங்களும் துல்லியமாக அவருக்குத் தெரியும். ஜெயமோகனுக்கு என்ன உள்ளன என்பது பற்றி எதுவும் தெரியாது. அவரே அவற்றை எடுத்து வைத்திருந்த போதும். அவர் வெளி நாட்டுப் பயணத்துக்கு விசாவை வீட்டில் வைத்து விட்டு ஏர்போர்ட் செல்பவர். 

@ ஒழுங்கு விஷயத்தில் நான் நாஞ்சில் நாடன் கட்சி. ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா சென்ற போது இங்கிருந்து எடுத்துச் சென்ற பேன்ட் எத்தனை, அவற்றில் ஃபார்மல் பேன்ட் எத்தனை, ஜீன்ஸ் எத்தனை என்று இப்போது கேட்டால் கூட பத்து நிமிடத்திற்குள் சரியாக சொல்லி விடுவேன். என் தலைவர் நாஞ்சில் அவருடைய மும்பை அலுவலக மாடிக்கு செல்ல எத்தனை படிகள் ஏற வேண்டும் என்பதையே சொல்லி விடுவார். நீங்கள் சரிபார்த்து வியப்பீர்கள். இறங்கவும் அதே அளவு படிகள் தேவை என்பது மேலும் வியப்பூட்டும்.

@ பிரச்னை அதுவல்ல. என் மனைவி ஜெயமோகனை தலைவராகக் கொண்ட எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தான் பெரும் சிக்கல். ஒரு எதிரியை நம் கூடாரத்திலேயே வைத்துக் கொண்டு  உடன் வாழ நேர்வது என்பது கொடுமை. அந்த கொடுமையை என்னை விட அவர்தான் அதிகம் அனுபவிக்கிறார் என்பது என் யூகம்.ஏனோ தானோவென்று வாழ்பவரை சகித்துக் கொள்ளலாம்.  ஆனால் எல்லாவற்றிலும் ரூல்ஸ் வைத்துக் கொண்டு வாழ்பவரை சகித்துக் கொள்ள அசாத்திய பொறுமை வேண்டும். 

@ “அதத அதது எடத்துல வக்யனும்” என்ற வசனத்தை நான் சொல்லிச் சொல்லி அதற்கு கொள்கைக் களிம்பு ஏறியது தான் மிச்சம்.  மனைவி அசைவதாக இல்லை. ஆரம்பத்தில் அதை ஒரு சாதாரண பழக்கம் என்றுதான் நினைத்தேன். இப்போது தான் புரிகிறது அது என் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று என்று. நான் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இடம் கொடுத்து விடுவேன். அதை யாராவது அரை இஞ்ச் நகர்த்தி வைத்தால் கூட எனக்குத் தெரிந்து விடும்.

@ இது வீடு எவ்வளவு விஸ்தீரணமானது என்பதைப் பொருத்த விஷயமல்ல. ஒரு சின்ன அறைக்குள் நூற்றுக் கணக்கான பொருட்களை, தனித் தனியான இடங்களை ஒதுக்கி, வைத்து, எடுத்து குழப்பமின்றி புழங்க முடியும். அது ஒரு பெரிய அற்புதமில்லை. லட்சக் கணக்கான விபரங்களை தனித் தனி இடங்களில் வைத்து பராமரிக்கவும், தேவைப் படுவதை தவறின்றி நொடிப் பொழுதில் எடுத்து கண்முன் நிறுத்தவும் ஒரு ஸ்லேட் அளவே உள்ள ஒரு கம்ப்யூட்டரால் முடிகிறதே!  அதை உருவாக்கிய மனிதனால் முடியாதா?  

@ மனமிருந்தால் ஒரு புளிய இலையில் மூன்று பேர் படுத்து உறங்க முடியும் என்று ஒரு பழமொழி உள்ளது.  அதே நேரத்தில் நானூறு அறைகளுக்கு மேல் உள்ள உலகின் பெரும் பணக்காரர்களின் வீடுகளில் ஒரு பொருளை எங்கு வைத்து தொலைத்தோம் என்று மறந்து போய் திணறவும் வாய்ப்புள்ளது. அங்கு எதையும் தொலைப்பதற்கான வாய்ப்பு உண்மையில் அதிகம்தான்.

@ “சாவிய எங்க வச்சேன்?” என்பது எங்கள் வீட்டில் மனைவி அடிக்கடி கேட்கும் கேள்வி. சாவிக்குப் பதில், மொபைல், கர்சிப், சீப்பு, (இப்போது) மாஸ்க். மெழுகுவர்த்தி என்று பொருளின் பெயர் மாறக் கூடும்; கேள்வியின் எலும்புக் கூடு மாறாது. “முதல்ல கிச்சன்ல பார்” என்பது நான் அடிக்கடி சொல்லும் பதில். அவரால் உலகில் முடியாத ஒரு காரியம் சாவிக்கு ஒரு நிரந்தர இடம் பார்த்துக் கொடுப்பது.  

@ பொருட்களை அவற்றுக்கென்று உரிய இடத்தில் வைத்து எடுக்கும் பழக்கம் நம்மிடம் இல்லையென்றால் பொருட்களை தொலைக்கவும், அவற்றைத் தேடவும் மொத்தத்தில் நம் வாழ்வின் சில வருடங்களையே செலவிட வேண்டி வரும். தூக்கத்துக்காக ஒருவரது வாழ்வில் எத்தனை வருடங்களை செலவிட வேண்டியுள்ளது என்று கணக்கிட்டுள்ளார்கள்.  தொலைத்ததைத் தேடுவதற்கு செலவாகும் ஆண்டுகளைக் கணக்கிடுவதும் முக்கியம். 

@ நம் வீட்டில் குறிப்பாக சமையலறையில் தேவையான எல்லா பொருட்களும் வரிசை ஒழுங்கோடு, பெயரிடப் பட்டு வைக்கப் பட்டிருக்க வேண்டும். அதை shipshape என்பார்கள்.  நாம் இல்லாத நேரத்தில் நம் வீட்டுக்கு இதுவரை வந்திராத புதிய விருந்தினர்  எவரேனும் வர நேர்ந்தால்  சிறிதும் சிரமமோ, குழப்பமோ இன்றி அவர்களே சமைத்து சாப்பிட முடிய வேண்டுமாம். இங்கே தண்ணீர் குடிக்க விரும்பினால் முதலில் தம்ளரைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.

@ எங்கள் வீட்டில் அடிக்கடி நடைபெறும் தகராறுகளில் ஒன்று நூலகம் தொடர்பானது. நூலகம் என்பது புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கும் இடம் என்பது பொதுவான எண்ணம். சில மாத கால இடைவெளியில் நூல் அலமாரியில் உதிர்ந்த கூந்தல் இழைகள் நிரம்பிய சீப்பு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச், சாவிகள், பாதி கடித்த கொய்யா என்று நூல்களுக்கு இணையான எண்ணிக்கையில் பொருட்கள் நிரம்பும். பாதுகாப்பான இடம், வருகிறவர்கள் யாரும்  அந்த இடத்துக்கு போக மாட்டார்கள் என்ற தைரியம். நான் நியாயமற்று போர் புரிவதில்லை. சில மாதங்களில் மறுபடியும் அதே கதை.  

@ பொருட்களைப் போலவே மனிதர்களையும் அவரவர்க்கு உரிய இடத்தில் வைப்பது அவசியம். சிலரை காம்பௌன்ட் சுவருக்கு வெளியிலேயே கழற்றி விட நேரும். சிலரை க்ரில் கேட்டுக்கு வெளியில். சிலரை திண்ணை (வரவேற்பறை) யோடு. சிலரை கசாலை வரையிலும். மிக மிகச் சிலரை மட்டுமே படுக்கை அறைக்குள் அனுமதிக்கலாம். 

@ எவ்வளவு தான் பாசமுள்ள பெற்றோர் என்றாலும், அண்ணன் ஒரு கோயில் அல்லது பாசமலர் என்றாலும் அவர்களுக்கு, மன்னிக்கவும், படுக்கை அறையினுள் நுழைய அனுமதி இல்லை. ‘பாசமலரி’ல் ஆனந்தனே (ஜெமினி) என் அனுதாபத்துக்கு உரியவர். அவர் இடப் பற்றாக் குறையால் சிரமப் பட்டவர். மிகை அன்பின் அதிகப்படி அழுத்தம் பூனையைக் கொன்று விடக் கூடும். 

@ யாரையும் அவரவர் இடத்தில் வைக்க வேண்டும். அரிதாக சில அவசியமான மாற்றங்கள் இந்த இட ஒதுக்கீட்டில் ஆழ்ந்த யோசனைக்குப் பின் செய்யப் படலாம். தொடர்புள்ள அத்தனை பேரும் தம் இடத்தையும் அதற்குரிய எல்லைகளையும் மதித்து நடந்து கொண்டால் உறவு சுலபமாக,  சுமுகமாக, உரசலின்றித் தொடரும். இந்த இட ஒதுக்கீடு வாழ்வின் முக்கியமான சவால். 

@ இன்னொரு கோணத்திலிருந்தும் சிக்கல் வரும். சிலர் பொருட்களை மனிதரைப் போலவும், மனிதர்களை பொருட்கள் போலவும் நடத்த முயலுவார்கள். இரண்டும்  தவறு. அப்போது புதிய சிக்கல்கள் வரும். நாய்க்கு சொத்து எழுதி வைத்தல், பொம்மையோடு உறங்குதல், மனைவியை அல்லது கணவனை, உறவினரை  உடைமைப் பொருளாக பாவித்து சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்ளுதல், மொபைலுக்கு மாலையிடுதல், முகநூலுக்குத் தாலி கட்டுதல் போன்ற நவீன கால ஆழமான ப்ரச்னைகள் உண்டு. யாரையும், எதையும் தப்பான இடத்தில் வைத்து, கொண்டாடினாலும், இழிவு செய்தாலும் துன்பம் வரும். 

@ ஜெயமோகன் “தோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்!” என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதை இந்த பாராவை எழுதுமுன் மீண்டும் படித்துக் களித்தேன். அதை இதுவரை படிக்காதவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள். (தாமதப் பறவைகளுக்காக கீழே சுட்டி உள்ளது.) அது சுந்தர ராமசாமி எங்களுடைய இன்னொரு பெருந் தலைவர் என்பதை நினைவூட்டியது. 

@அந்த கட்டுரையில் நகைச்சுவை வழியாத சில வாக்கியங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை: ஒன்று,”ஒழுங்கு என்பது நாம் அறிந்த வரிசைமுறையையும் தர்க்கத்தையும் கொண்டது. ஒழுங்கின்மை என்று நாம் சொல்வது நமக்குத்தெரியாத ஒழுங்கை.” அடுத்தது “குடும்ப வாழ்க்கை என்பதே பல்லாயிரம் தவறுகள்மூலம் உருவாகும் ஒரு சரி தானே? “

(தொடர்கிறது)

https://www.jeyamohan.in/319/

Categories அனுபவம், கல்வி, நகைச்சுவை

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close