திருக்குறளுக்குத் தடை!

@ வழக்கத்துக்கு மாறாக அன்று தொலைக் காட்சியைப்  பார்த்த போது அந்த ப்ரேக்கிங் ந்யூஸ் கண்ணில் பட்டது. அது எல்லா திசைகளிலிருந்தும் தாக்கியது. அதிர்ச்சியடைந்து போனேன். நம்பவே முடியவில்லை. திருக்குறளுக்குத் தடை! பல வியப்புக் குறிகளுடன். அன்று ஏப்ரல் முதல் நாளல்ல என்பதை உறுதி செய்து கொண்டேன். உண்மையிலேயே ப்ரேக்கிங் ந்யூஸ் தான்.

@  தமிழ் மறை, உலகப் பொது மறை, தெய்வ நூல்,உத்தர வேதம் என்றெல்லாம் திருக் குறளை படித்தே அறியாதவர்கள் உட்பட எல்லோராலும் போற்றிப் புகழப் பட்டது திருக்குறள். கீதைக்கு இணையாக புனித நூலாக அது மதிக்கப் பட்டது. ஆட்சியாளர்களுக்கு மிகவும் பிடித்த நூல். எல்லா அரசுப் பேருந்துகளிலும் திருவள்ளுவரின் படமும், கீழே ஒரு திருக்குறளும் கட்டாயம் இருக்கும். அது பஸ் கம்பெனி உரிமையாளரின் போட்டோ என்று மயங்கிய முது பெண்டிர் உண்டு.

@ தமிழக சட்டமன்றம் தினம் ஒரு திருக்குறளுடன் தான் தன் அலுவல்களைத் தொடங்கும். நாடாளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கையை தமிழறிந்த அமைச்சர் ஒரு திருக்குறளுடன் தொடங்குவார். வட இந்தியத் தலைவர்கள் தமிழகம் வரும் போது தவிர்க்காத சடங்கு ஒன்று உண்டு. வணக்கம், நன்றி மற்றும் ஒரு குறளை அவர்கள் கொத்துப் புரோட்டா போல படைப்பார்கள். மதலையின் குதலை கலந்த மழலை போன்ற அதைக் கேட்டதும் மக்களின் கரவொலி விண்ணை முட்டும்.

@ மக்களிடத்தில் திருக்குறள் மீது மாறாத பாசமுண்டு. உரையின் போது பொருத்தம் இருக்கிறதோ, இல்லையோ சிலபல குறள்களை சேர்க்காவிட்டால் பேச்சாளருக்கு கைதட்டல் விழுவதில்லை. அவரை தமிழாய்ந்த அறிஞராக யாரும் மதிப்பதில்லை. எனவே மைக்கை பிடிக்க குறைந்தது 10 குறளாவது தெரிந்திருக்க வேண்டும்.  பலர் பத்தைத் தாண்டி படிப்பதும் இல்லை. அநேகமாக தமிழ் எழுத்தறிவுள்ள பலரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளதாக ஒரு வதந்தி உண்டு.

@ நான் சிறு வயதில் திருக்குறளை கடவுள் எனக் கருதி வணங்குவேன். பேனா தொலைந்து போவது போன்ற கஷ்ட காலம் வரும்போது “கடவுளே!” என்பதற்குப் பதிலாக “திருக்குறளே!” என்று பிரார்த்திப்பேன். எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லாத போதும் பள்ளிக்கு பையிலும், பின்னர் கையிலும் புத்தகங்களை சுமந்து செல்லும் போது முதலில் மு.வ. உரை கொண்ட கையகல திருக்குறள் இருக்கும். நான் குறள் மன்னன் ஆனதை முன்பே சொல்லியிருக்கிறேன். (தோல்வி தரும் லாபங்கள்!…8 )

@ இவ்வாறு  மக்கள், அரசியல்வாதிகள் என்ற இரு முக்கிய தரப்பினராலும் கொண்டாடப் பட்ட திருக்குறளை தடை செய்யக் காரணம் என்ன என்று எல்லோரும் பிய்த்துக் கொண்டனர். இதுதான் சாக்கென்று எல்லா தொலைக் காட்சி சானல்களும் அவசரத்துக்குக் கிடைத்தவர்களை  வைத்து விவாதங்களை நடத்தின. சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்தன. அவற்றில் பொய்யானவை, கற்பனையானவை எவை என்பது சொன்னவர்களுக்கே தெரியாது. கேட்டவற்றில் நினைவில் உள்ளவற்றை குத்து மதிப்பாகத் திரட்டித் தருகிறேன்.

@ திருக்குறளை தொடக்கத்தில் புகழ்ந்தவர்கள் பின்னர் விழித்துக் கொண்டனர். இடதுசாரி சிந்தனையாளர்கள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” , “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்”  போன்ற குறள்களை தம் கொள்கைகளுக்கு ஆதரவானவை என்று நினைத்தனர். பெரியாரியர்களும் ” தெய்வம் தொழாள்”, “மழித்தலும் நீட்டலும் வேண்டா”, அறிவுடைமை  என்ற அதிகாரத்தில்  உள்ளவை போன்ற குறள்கள் பகுத்தறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணினர்.

@ ஆனால் கடவுள் நம்பிக்கை, மறுபிறப்பு, ஏழ் பிறப்பு, ஊழ் போன்ற மிகவும் பிற்போக்கான பகுத்தறிவுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகள் திருக்குறளில் உள்ளதை அவர்களால் மன்னிக்க முடியவில்லை. திருவள்ளுவர் இந்து அல்ல, சமணர் என்பது சற்று ஆறுதல் அளித்தாலும் அவர் பெரும் குழப்பவாதியாகவே தோன்றினார். அறம், பொருள், இன்பம், வீடு என்ற சமண விழுமியங்களில் அவர் வீட்டை விட்டு விட்டதும், இன்பத்துப் பாலில் தேவைக்கு அதிகமாகத் திளைத்ததும் அவர்களைக் குழப்பின.

@ பலர் வறுமையில் வாடுவதும், சிலர் செல்வம் குவித்து செழிப்பதும் பண முதலைகளின் சுரண்டலால் தான் என்ற உண்மையை சொல்லாமல், “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” என்று வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று திருவள்ளுவர் சொன்னது அவர்களை எரிச்சலூட்டியது. எனவே குறள் அவர்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. மதச்சார்பற்ற கட்சிகள் அவர்களுக்கு ஆதரவளித்தன.

@ அவர்களுக்கு எரிச்சலூட்டிய அதே கருத்துக்கள் இந்துத்துவ சக்திகளுக்கு உவகையூட்டின. அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள் யார் என்பது இவர்கள் எடுக்க வேண்டிய நிலைபாட்டைத் தெளிவாக்கியது. திருக்குறள் மீது பாசம் பிறந்தது. அதன் மீதான தடையை நீக்க வேண்டுமென்று போராடினர்.

@ ஊர் இரண்டு பிரிவாகப் பிரிந்து நின்றது. எந்த பிரிவிலும் சேராது நின்றவர்கள் நடுநிலை *க்கிகள் என்று வசை பாடப் பட்டனர். அவர்கள் மனிதர்களாகவே மதிக்கப் படவில்லை. எனவே ஏன் வம்பு என்று அவர்கள் அவசரமாக ஒரு பிரிவில் சேர்ந்து, பிறகு அது ஆதரவு தரப்பா, எதிர்த் தரப்பா என்று விசாரித்து அறிந்து கொண்டனர்.

@ தமிழ்ப் புலவர்கள் ஆய்ந்து நோக்கி தாம் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் கொள்கைக்கு ஏற்ப நிலைபாடு எடுத்தனர். பள்ளி மாணவர்கள் ஏன் திருக்குறள் மீது இவ்வளவு காழ்ப்புடன் இருந்தனர் என்பதுதான் வியப்புக்கும் கூர் நோக்குக்கும் உரியது. அவர்களை வகுப்புக்கு பத்து குறள்கள் வீதம் கல்வி வாழ்க்கை முடியும் வரை மனப்பாடம் செய்ய வைத்தது காரணமாக இருக்கலாம். சடங்காக மாறும் எதுவும் சலிப்பேற் படுத்தும். சிலர் வெடிகளை வெடித்து கொண்டாடியதாகக் கேள்வி.

@ திருவள்ளுவர் பெண்ணியவாதிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்று பெண்களைப் போற்றியதையெல்லாம் புறந்தள்ளி விட்டு அவர் ஒரு ஆணாதிக்க வாதி என்பதை அவர்கள் ஏராளமான சான்றுகளுடன் நிறுவினர். பெண்ணடிமைத் தனத்தை அவர் நுட்பமாக தூண்டுகிறார் என்பதற்கு  அந்த குறளே  சாட்சி என்றனர். பெண் வழிச் சேரல், வரைவின் மகளிர் போன்ற அதிகாரங்களிலிருந்து மேலும் பல குறள்களை எடுத்துக் காட்டினர்.

@ திருவள்ளுவர் அதிகார வெறி பிடித்தவர் என்பது திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன என்பதிலிருந்தே தெரிகிறது. மேலும் அவர் ஒரு சேடிஸ்ட் என்றே அவர்கள் குற்றம் சாட்டினர். வாசுகி என்ற முதுமகளை அவர் சொல்லவொண்ணாக் கொடுமைக்கு ஆளாக்கியவர். பகல் வெளிச்சத்தில் கூட  விளக்கேற்றி வைக்க சொல்வார். கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது வேண்டுமென்றே நடுவில் கூப்பிடுவார். அந்தரத்தில் வாளியை விட்டு விட்டு வாசுகி உடனே ஓடி வர வேண்டும். உணவு பரிமாறும் போது ஒரு பருக்கை கூட சிந்தக் கூடாது. இப்படி எண்ணற்ற வன்முறை/ வன்கொடுமைக்கான ஆதாரங்களை பெண்ணியவாதிகள் அடுக்கினர்.

@ தமிழின் முதன்மை எழுத்தாளர் ஜெயமோகன், திருவள்ளுவரை இன்றைய கோட்பாடுகளின் அடிப்படையில் வரையறுக்கக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் தத்துவ நோக்கிலும்,வரலாற்று நோக்கிலும் அணுக வேண்டும் என்று தன் நானூறு பக்க அளவிலான கட்டுரையில் சுருக்கமாக விளக்கினார். உலக இலக்கியங்களில் கவித்துவத்தில் குறளுக்கு  இணையாக மிகச் சிலவே உள்ளன என்றார். ஜெயமோகன் திருவள்ளுவரை ஆதரிக்கிறார் என்பதே திருக்குறள் தடை செய்யப் பட்டது சரி என்பதை நிரூபிக்கிறது என்று அவரை எதிர்ப்பவர்கள் சுட்டிக் காட்டி மகிழ்ந்தனர்.

@  திருக்குறள் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது. காமத்துப் பால் ஒரு ஆபாசக் களஞ்சியம். சொல்லவே கூசுகின்ற பல கெட்ட வார்த்தைகளை அது கற்றுக் கொடுக்கிறது. ஒரு நீதி நூலில் காமத்துப் பாலுக்கு என்ன தேவை? எனவே திருக் குறள் தடை செய்யப் பட வேண்டும் என்று குறள் மறுப்போர் வாதங்களை அடுக்கினர்.

@ பொழுது போகாது சிரமப் பட்ட யாரோ அடையாளம் தெரியாத சிலர் உயர் நீதி மன்றத்தில் திருக்குறளைத் தடை செய்யுமாறு ஒரு பொது நல வழக்கு போட நீதிபதி அரசின் கருத்தைக் கோரினார். பொதுத் தேர்தல் வரவுள்ள போது ஏன் இந்த தலைவலி என்று நினைத்த ஆளும் கட்சி உளவுத் துறையின் கருத்தைக் கேட்டது. பெரும்பகுதி மக்கள் திருவள்ளுவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக பதில் வந்தது. எனவே சுலபமாக ஓட்டுகளை அள்ளி விடலாம் என்று திருக்குறளுக்கு தடை விதிக்கப் பட்டது.

@ ஒரு உண்மையை யாரும் கவனிக்கவில்லை. பொதுக் கருத்து என்று சொல்லப் படுவது உண்மையில் பெரும்பான்மையான மக்கள் கருத்தல்ல. அது உரத்துப் பேசுபவர்களின் கருத்து. முகநூல்,ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் குரல் எழுப்புபவர்களின் கருத்து. அவர்களில் பலர் வாக்குச் சாவடிகளுக்கே செல்வதில்லை. மக்கள் உரத்துப் பேசுவதில்லை. மௌனமாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் பேசுவது வாக்குச் சீட்டுகள் மூலம்தான். எல்லா கணிப்புகளின்,கணக்குகளின் கதியும் அப்போதுதான் தெரியும்.

@ இப்படி ஒன்று நடக்கவே முடியாது என்பதற்கு காரணம் உண்டா? “வாழும் வள்ளுவர்களை”த் தவிர, உண்மையான திருவள்ளுவர் தற்போது உயிரோடு இல்லை. அவர் அரசியலில் இறங்கியோ அல்லது வேறு விதத்திலோ தொல்லை கொடுக்கும் வாய்ப்பு துளி கூட இல்லை. திருவள்ளுவருக்கு ஓட்டு வங்கி எதுவும் இல்லை. இவற்றைத் தவிர வேறு  என்ன காரணம் வேண்டும்?

@ “பேய்ச்சி”க்கு வந்த நிலை வேறு எந்த நூலுக்கும் ஏன் வரக் கூடாது? திருக் குறளுக்கு வந்தால் என்னாகும்?

Categories அனுபவம், அரசியல், இலக்கியம், நகைச்சுவை, நூல் வாசிப்பு

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close