எது போதையில்லை?–1

@ என்னுடன் பணியாற்றிய ஒரு ஆசிரியர் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். காலையில் காபி/நீராகாரத்துக்குப் பதில் மதுவில் தொடங்கி இரவில் பாலுக்குப் பதில் மதுவில் நாளை நிறைவு செய்பவர். பல ஆண்டுகளுக்குப் பின் அதிலிருந்து வெற்றிகரமாக விடுபட்டார். பிறகு மத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். தீவிரமாக என்றால் கடவுளே அரண்டு போகும் அளவுக்கு. ஒரு போதையிலிருந்து மீண்டு இன்னொரு போதையில் மாட்டிக் கொண்டார் என்று தோன்றியது. அப்படிப் பார்த்தால் எதுதான் போதையில்லை?

@ “நாம் மனிதர்கள் என்பதால் சிலவற்றை செய்யக் கூடாது.நாம் ஆசிரியர்கள் என்பதால் வேறு சிலவற்றை செய்யக் கூடாது.” எந்த மனிதக் குழுவும் ஒரு செயலுக்கு முழு பொறுப்பானவர்களோ,விலக்கப் பட்டவர்களோ அல்ல.நான் பார்த்ததில் ஆசிரியர்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவில் மது அருந்துவோர் சற்று அதிகம்.ஒருவர் இரண்டாவது மிஷின் என்ற குழூக் குறியை பயன்படுத்துபவர்.

@ “நமக்கு எல்லாப் பழக்கங்களும் உண்டு.ஆனால் எதற்கும் அடிமை இல்லை” என்று காந்தன் ஒரு முறை சொன்னார். குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து சுடு தண்ணீர் சாப்பிட்டு வந்தால் அதுவும் போதை மாதிரி  அடிமையாக்கும் பழக்கம் ஆகலாம் என்று மோகன் குறிப்பிட்டார்.( இரு பெயர்களுக்கும் முன் ‘ஜெய’ சேர்த்துக் கொள்ளவும்)

@ எந்த பழக்கம் அது இல்லாவிட்டால் நம் மனதை, நம்முடைய நார்மல் மன,உடல் செயல்பாடுகளை பாதிக்கிறதோ, எது செய்த பின் ஆசுவாசம் அடைந்தது போல் தோன்றுகிறதோ அதை போதை என்று சொல்லலாம்.அது இல்லாவிட்டால் கைகள் நடுங்குவது போன்று,மனதின் சம நிலை பாதித்து அசாதாரண நடத்தை உருவாகும்.

@ 1000 மணி நேர வாசிப்பு என்ற எல்லையை எட்டும் வரை தினம் ஏழரை  மணி நேரம் வாசித்தேன்.  பிறகு தினம் ஐந்தரை மணி நேரம் மட்டுமே வாசிக்கிறேன். இரண்டு மணி நேரம் கேளிக்கைக்கு.கேளிக்கை சீரியசானதாகவும் இருக்க முடியும். வாசிக்காத நேரம் வீணாவதாகத் தோன்றும். ஒருமுறை ஒரு ஆசிரிய நண்பர் “நீங்க குடுத்தது சூப்பர் புக்,தலைவரே” என்றார். நான் மகிழ்ந்து, “அப்புடியா?” என்றேன். “ரெண்டு பக்கம் படிக்கிறதுக்குள்ளே தூக்கம் வந்துடுச்சு” என்றார் அவர். இப்போதெல்லாம் எனக்கு படிக்காத நேரத்தில் தூக்கம் கண்ணை சுழற்றும். படிக்கத் தொடங்கினால் தூக்கம் பறந்தோடி விடும். அதனால் படிப்பதை  addiction என்று சொல்லலாமா?

@ கிராமத்துப் பெண்கள் தகராறின் போது குறிப்பிட்ட ஒரு வசவைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள். உண்மையிலேயே அப்படிப் பட்ட பெண்கள், எல்லோரையும் அப்படிப் பட்டவர்கள் தான் என்று நிரூபிக்க பெரிதும் முயல்வார்கள். ஆண்கள் “எவன் லஞ்சம் வாங்காம இருக்கான்?” என்பதும், குடிப்பவர்கள் “இப்ப எவன் குடிக்காம இருக்கான்?” “எவன் திருடாம இருக்கான்” என்பதும் எல்லாம் ஒன்றுதான்.குற்ற உணர்விலிருந்து தப்பிக்கும் முயற்சி.

@ செய்வது எதுவாயினும் அதை தீவிரமான ஈடுபாட்டுடன் தன்னை மறந்து, சூழல்  மறந்து முழு விசையோடு கூர்ந்த கவனத்தோடு செயல் படுபவர்கள் உண்டு. எடிசன் உணவை மறந்து தன் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவாராம். அவருக்கென எடுத்து வைக்கப் பட்ட உணவை ஒரு நண்பர் உண்டு சென்று விட, பின் காலித் தட்டைப் பார்த்த எடிசன் ஏற்கனவே சாப்பிட்டு விட்டோம் போல என்று நினைத்து மீண்டும் ஆய்வுக் கூடத்துக்குச் சென்றதும் எல்லோரும் அறிந்தது.எடிசனின் ஆராய்ச்சி ஆர்வமும் போதை தானா?

@ தேர்வில் ஒரு கட்டுரையை நான்கு ஆசிரியர்களிடம் மதிப்பீடு செய்யக் கொடுத்தால் அவர்கள் அதற்கு மாறுபட்ட மதிப்பெண்கள் தரக் கூடும்.ஒரே மதிப்பெண் வராது.Objective-type வினாக்களின் விடைக்கு ஒரே மாதிரி மதிப்பீடுதான் இருக்க முடியும்.கவனக் குறைவாலும்,விரைவாலும் தவறான பதிலுக்கு மார்க் தருவதும்,சரியான விடைக்கு தராமல் விடுவதும் தவறு.அதைச் சுட்டிக் காட்டும் முதன்மைத் தேர்வாளரை ஒரு உதவித் தேர்வாளர் சரியான workaholic (பணி புரிவதில் போதை கொள்பவர்) என்று குறிப்பிட்டார்.alcoholic  ஐ கூட மன்னித்து விடுவார் போல. அவருடைய குழந்தை ஒரு மார்க் தேவையற்ற இழப்பால் முதல் மதிப்பெண்ணை பறி கொடுத்தால் எப்படியிருக்கும்!

@ இது போன்ற பொருத்தமற்ற செயல்களை போதை என்று அபத்தமாக குறிப்பிடும் போது சில உண்மையான தீவிரமான போதைகள் விரல்கள் வழியே தப்பித்து விடும் அபாயமுண்டு. இயற்கையான, மூலிகை வடிவிலான, இரசாயனங்களாலான போதைப் பொருட்கள் அறியப் பட்டவை. அவை பிசாசுகள் என்று தெரியவாவது செய்யும். நான் சொல்ல நினைப்பது முற்றிலும் வேறு வகையான சில போதைகளைப் பற்றி. அவை  போதை என்ற உண்மையே பலருக்குத் தெரியாது. அவை பிசாசுகள் என்று தெரியாதது மட்டுமல்ல பிரச்னை; பலர் அவற்றை தேவதைகள் என்று நினைத்து வழிபடுகிறார்கள். அவை ஆபத்து என்று தெரியாமலேயே நம்மில்  பெருகி  நிற்பவை. பெரும்பாலும் பெற்றோரால் தம் குழந்தைகளுக்கு அன்போடு அறிமுகப் படுத்தப் படுபவை.

@ பெருகவாழ்ந்தானில் படிப்பில் பின் தங்கிய ஒரு மாணவனை தனியாக விசாரிக்கும் போது அவன் சொன்னது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அவன் ஒரு நாளைக்கு நான்கு திரைப் படங்கள் பார்க்கிறான். நானும் ஒருமுறை ஒரே நாளில் நான்கு படங்கள் பார்க்கும் சாதனையை செய்திருக்கிறேன். அவன் தினமும் அவ்வாறு நான்கு படங்கள் பார்க்கிறான். அதுவே பிரச்னை. ஏழைக் குடும்பம். பெற்றோர் இருவரும் கூலி வேலைக்கு செல்பவர்கள். உறவினர்கள் வீடுகளில் மாறி மாறி பார்க்கிறான். தினம் இருபத்தி நான்கு மணி நேரமும் இலவச டி.வி.யில் இலவச சினிமா. கண்டிக்க பொறுப்பான யாருமில்லை. பள்ளிக்கு வருவதில்லை,வந்தாலும் படிப்பதில்லை.

@ இவன் எதிர்காலத்தில் என்ன ஆவான்? எதை செய்ய இவனுக்கு என்ன திறன் இருக்கும்? எல்லா வகை இலவசங்களும் இவன் போன்றோருக்கு தேவையே. எல்லா வகை அரசியலுக்கும் இவன் போன்றோர் தேவையே. இவர்கள் மீது டாஸ்மாக் கடைக் கண் வைத்து விட்டால் இன்னும் விசேஷம்.

@ வசதியானவர்களின் குழந்தைகளுக்கு இன்னும் மேம்படுத்தப் பட்ட போதைகள் கிடைக்கின்றன. தவழும் குழந்தைகளுக்கு மொபைல் வடிவ பொம்மைகள் தொலை நோக்கோடு தரப் படுகின்றன.சில நாட்களிலேயே உண்மையான மொபைல் தரப் படுகிறது. அதில் வீடியோக்கள் அறிமுகப் படுத்தப் படுகின்றன. மொழி அறிவதற்கு முன்பே குழந்தை வீடியோக்களை ரசிக்கக் கற்கிறது. இந்த கல்வியைத் தொடர்ந்து ஏ.கே.47 பொம்மைத் துப்பாக்கி வடிவ பொம்மைகளும் எந்த நோக்கத்துக்காக என்று தெரியாமல் பெற்றோரால் வாங்கி வழங்கப் படுகின்றன.

@ நான் தலைமை ஆசிரியராக இருந்த காலத்தில் என் மாணவர்களின் தலை விதியையும், தேர்வு  தொடர்பான என் தலை வலியையும் கிரிக்கெட் தீர்மானம் செய்தது. ஓராண்டு ஒரே ஆசிரியர் கையாண்ட வணிகவியலில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்ற அதே மாணவர்கள் கணக்குப் பதிவியலில் படு மோசமாக தோல்வியுற்றனர். க.ப. தேர்வுக்கு முந்தைய இரவில் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தால் என் குழந்தைகள் என்ன செய்வார்கள்! கிரிக்கெட் மாணவர்களுக்கு ஹீரோவாகவும்,அவர்கள் கல்விக்கு வில்லனாகவும் திகழ்ந்தது. கிராமப் புற மற்றும் ஏழை மாணவர்கள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப் பட்டனர்.

@ கிராமப் புற/ ஏழை மாணவர்களின் நலன் மீது அக்கறை காட்டும் எந்த அரசியல்வாதியும் இது பற்றி பேசியதில்லை. மாணவர்களுக்கு எரிச்சலூட்டும் எதுவும் அவர்களுக்கு உவப்பானதில்லை.

(தொடர்கிறது)

Categories அனுபவம், கல்வி, குழந்தை வளர்ப்பு

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close