”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் – 8

K.K.S.சிவா,பரவாக்கோட்டை

வணக்கம். தங்களின் ”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” படித்தேன். பொதுவாக நான் ஒரு முழு புத்தகத்தையும் படித்து முடித்தது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான். தற்போது உள்ள சூழ்நிலையில் என்னால் முழு புத்தகத்தையும் படித்து முடிக்க இயலாது என்று நினைத்தேன். ஏனெனில் நான் முன்பு எல்லாம் நாவல்களை மட்டும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன்.

தற்போது முகநூலில் தங்களின் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருவதனால் இப்புத்தகத்தை என்னால் முழுவதுமாக படித்து முடிக்க முடியும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகத்தில் ஆரம்பத்தில் வரும் ஊர்கள் மற்றும் இடங்கள் எனக்கு வெகு பரிச்சயமானதாக இருந்தமையால் என்னால் எளிதாக புத்தகத்தில் ஒன்றிவிட முடிந்தது. வாசிப்பை ஒரு தவமாக நினைத்து நீங்கள் செயல்பட்டது பிரமிப்பை ஏற்படுத்தியது.

கீழ்க்கண்ட இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.

சிற்பியின் வேலை சிலை உருவாக்குவது அல்ல. கல்லில் இருந்து சிலை அல்லாதவற்றை நீக்குவது

வரிகள் சொல்வதை விட வரிகளுக்கு இடையே வரும் மௌனம் சொல்வது முக்கியத்துவம் வாய்ந்தது

நோக்கம் நல்லவை எனில் சில சிறிய சிலுவைகளை சுமக்கத் தயங்கக் கூடாது

ஒரே ஆசிரியரின் மேற்பார்வையில் குழந்தைகளின் கல்வி இருக்க வேண்டும் என்பது நல்ல கருத்து. உயிரற்ற சிக்னல் விளக்குகளுக்கு நாம் கொடுத்திருக்கும் அதிகாரம் நம்மை ஒழுங்கான வழியில் செயல்பட வைப்பது.

எதையோ பார்த்துவிட்டு இதை பார்த்தால் தாத்தா எப்படி ரசிப்பார் என்று அட்வி கேட்டது  நெகிழ்ச்சி,

பெற்றோர் கைகளும் குழந்தையின் வளர்ச்சியை பெரும் அளவு தீர்மானிக்கிறது, அது அவர்களின் முதிர்ச்சியைப் பொறுத்தது,

வயது முதிர்ந்தவர்கள் எல்லோரையும்  வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்,, அதுபோல் ஆசிரியர்கள் எல்லோரையும் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும்,

மேற்கண்ட வரிகள் என்னைக் கவர்ந்த வரிகளில் சில,

ஆயிரம் மணி நேரம் வாசிப்பு என்பது தன் ஐம்புலன்களிலும் வாசிப்பு பழக்கம் புரையோடி இருக்கும் ஒருவரால் தான் முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. கடைசியில் அட்வி அனைத்தையும் மறந்துவிட்டார் என்பது எந்த ஒரு பழக்கத்தையும் தொடர்ந்து கடைபிடித்தால் தான் நிலைத்திருக்கும் என்பது உறுதியாகிறது

சிவ சங்கரன் விநோதமான கனவு கண்டிருக்கிறார். யாருடைய கனவில் நீங்கள் வந்தாலும் நிச்சயமாக ஆசிரியராகத்தான் வருவீர்கள். பெயர் வேண்டுமானால் மாற வாய்ப்புண்டு தோற்றம் மாறாது.

இந்தப் புத்தகத்தை ஆரம்பத்தில் படிக்கும் போது ஒரு சிறிய நூலிழை ஒற்றுமை உங்களுக்கும் எனக்கும் இருந்தது என்று எனக்குத் தோன்றியது. என்னவென்றால் என்னுடைய தந்தையும் தங்கள் தந்தை போலவே வடக்கு தெருவில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் என்னுடைய அப்பாவும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் பற்று கொண்டு இருந்தவர். அதன் காரணமாகவே எனக்கு ஜீவானந்தம் என பெயரிட்டு பின்னால் அது சிவானந்தமாக மாறிவிட்டது. பொருள் மடிப்பதற்காக கடைக்கு வரும் பழைய ஆனந்த விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகள் எனக்கும் ஆரம்பத்தில் அதிகமாக கிடைத்ததால் எனது நண்பர்களை காட்டிலும் எனக்கு மிக மிக. அனுபவமும் படிப்பதில் அதிக விஷய ஞானமும் ஏற்பட்டது

காவல்துறையில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் S.P. செந்தில்குமார் ஐயா போன்று வெளிப்பார்வைக்கு கரடு முரடாகத் தெரிந்தாலும் உள்ளே சிலருக்குள் அவர்களுக்கான இலக்கியவாதிகள் ஒளிந்திருப்பார்கள். மேலும் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

அழகிய சிங்கர் உங்களை அருமையாக மதிப்பீடு செய்துள்ளார். உண்மையிலேயே ஆயிரம் மணிநேரம் வாசிப்பு புத்தகம் ஒரு நாவல் போல தான் இருந்தது. அந்த புத்தகத்தை ஒரு சரியான நபரிடம் பரிசளிப்பதற்காக சரியான நபரை தேடிக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு பழக்கத்திற்கு நீங்கள் கொண்டிருந்த டிசிப்ளினுக்கு ஒரு சலாம். சீடன் என்பதற்கு டிசிபிள் என்கின்ற ஒரு வார்த்தையை கற்றுக் கொண்ட திருப்தி எனக்கு. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை இன்றளவும் நான் வார்த்தைகளை புதிது புதிதாக கற்றுக் கொண்டிருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் இதனால் எனக்கு என்ன பலன் என்று தெரியவில்லை. ஆனால் என்னுடைய ஆர்வம் குறையவில்லை. தொடர்ந்து தங்களுடைய அனுபவங்களை புத்தகங்களாக எதிர்பார்க்கிறேன்.

மொத்தத்தில் மிகச் சிறப்பாக இருந்தது புத்தகம், நீங்கள் ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் தமிழிலும் புலமை பெற்றவர் என்பது வரிகளில் நன்கு தெரிந்தது, மிகவும் சிறப்பான அனுபவம், வணக்கம் நன்றி.

#

(K.K.S. சிவா என்கிற ஜீவானந்தம் அல்லது சிவானந்தம் ஒரு உண்மையை நிரூபித்திருக்கிறார். கோயில் கோபுரக் கலசத்தில் பல்வேறு விதைகளை பக்குவப்படுத்தி சேமித்து வைத்திருப்பார்கள். எதிர்பாராத பேரழிவால் எல்லாம் நாசமாகிப் போனாலும் கலசத்தில் உள்ள விதைகளைக் கொண்டு மீண்டு விட முடியும். அவ்விதைகள் நீண்ட காலம் உயிர் தரித்திருக்கும்.

என்றோ போட்ட வாசிப்பு விதை இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அவரிடத்தில் முளை விட்டிருக்கிறது. எல்லா விதையும், எல்லா நிலத்திலும் ஒரே மாதிரி உயிர் பிழைத்திருக்குமா? தெரியவில்லை. எல்லா திரவமும் ஒரே வேகத்தில் ஆவியாகாது. நீர் கொஞ்சம் தாக்குப் பிடிக்கும். பெட்ரோல் தரையில் சிந்தும்போதே ஆவியாகிவிடும். கவனமாக இருப்பதே நல்லது.

சிவா என்றோ அனுப்பிய பதிவோடு இன்று எழுதிய குறிப்பையும் இணைத்துக் கொண்டேன். சிறுவர்களும் இளைஞர்களும் தினம் வளர்வார்கள். வாசிப்பும், எழுதுவதும் தினம் முயன்றால் வளரும். சிவாவின் எழுத்தில் அந்த வளர்ச்சி தெரிந்தது.

ஆம்,வாசிப்பு சவாலில் வெல்ல ரத்தம்,சதை, நாடி, நரம்பு எல்லாவற்றிலும்  வாசிப்பு வெறி ஊறிப்போயிருக்க வேண்டும். சிறு வயதில் சிவாவின் கடைக்கு சென்றிருக்கிறேன். அவருடைய அப்பா ஏற்கனவே சிவந்த நிறம். வாயில் வெற்றிலையைக் குதப்பியவாறு மேலும் சிவப்பாக இருப்பார். கம்யூனிஸ்ட் வேறு.

பலனை எதிர்நோக்கி எதையும் செய்வது முயற்சியின் தரத்தைக் குறைத்து விடும். கற்றலின் பலன் உடனேயும் தெரிய வரலாம். நீண்ட காலமும் பிடிக்கலாம். சிஷ்யனை ஆங்கிலத்தில் disciple என்பார்கள். அந்த சொல்லை டிஸைப்ள் என்று உச்சரிக்க வேண்டும். டிஸிப்ளின், ஆனால் டிஸைப்ள். என்ன இது, அநியாயமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்.

நன்றி,சிவா! …. சாந்தமூர்த்தி)

”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாங்க

அணிந்துரை — எழுத்தாளர் செல்வேந்திரன்

”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” — நூல் வாசிப்பு அனுபவம்–1

”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் –2

” ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் — 3

பொருத்தமான அட்டைப்படம்

” ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் — 4

”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் – 5

2023- ல் சேர்த்த சொத்துக்கள் விபரம்

”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் – 6          https://wp.me/patmC2-10t

”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் – 7        https://wp.me/patmC2-10E

@@@@@@

Categories நூல் வாசிப்பு, நூல் விமர்சனம்

4 thoughts on “”ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” நூல் வாசிப்பு அனுபவம் – 8

  1. காந்தி March 2, 2024 — 12:10 pm

    சிவாவின் வாசிப்பு ஆர்வம் நான் அறிந்த ஒன்று. தங்களது நூலை வாசித்து அதைப்பற்றிய தனது அனுபவத்தை தந்த விதம் சிறப்பு. . நானும் விரைவில் வாங்கி வாசிக்கிறேன். நன்றி.

    Like

    1. நன்றி,காந்தி!

      Like

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close