@ “நான் திருமணம் செய்து கொள்வதாகத் தீர்மானம் செய்திருக்கிறேன். உங்களுடைய மேலான ஆலோசனை என்ன?” என்று ஒருவர் பெர்னாட் ஷா போன்ற அறிஞரிடம் கேட்டார். அவர் சுருக்கமாக ஒரே சொல்லில் பதில் சொன்னார்: “Don`t.” யாரும் இந்த ஆலோசனையின் படி நடக்க மாட்டோம். இவர் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டு நம்மை மட்டும் வேண்டாம் என்கிறாரே என்றே முணுமுணுப்போம். ஊழ் அப்படித் தான் உருத்து வந்து ஊட்டும்.
@ அரசுப் பணியாக இருந்தாலும், அரசியலில் ஆளும் பணியாக இருந்தாலும் சில படிகளுக்கு மேல் செல்லாதிருப்பது நல்லது. இந்த அரிய ஆலோசனையை யார் சொன்னாலும் நான் உட்பட யாரும் அதைக் கேட்கப் போவதில்லை. ஏனென்றால் அதிகார போதை எல்லா போதைகளின் உச்சம். விஸ்கியை வேண்டாம் என்று மறுக்கும் ஆண்மை கொண்டவர் கூட அதிகாரம் வேண்டாம் என்று ஒரு போதும் மறுப்பதில்லை. எதை மறுக்கவும் சிறிது ஆண்மை வேண்டும். பிறன் மனையை மறுக்க பேராண்மை வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
@ ஆஸ்திரேலியாவில் ப்ரமோஷன் என்ற கான்செப்ட் எல்லாவற்றிலும் செயல் படுவதில்லை என்று கேள்விப் பட்டேன். அங்கே ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் காலி என்றால் அறிவிப்பு வெளியிடுவார்கள். அதற்குத் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தேர்வுகளில் வென்று திறமையை நிரூபிப்பவர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார். வயது, சீனியாரிட்டி எதுவும் பொருட்டல்ல.
@ நம் உலகமே வேறு. இங்கு ப்ரமோஷன் நம் பிறப்புரிமை. அரசுப் பணியில் சேரும் நாள் நம் பணி வாழ்க்கையையே தீர்மானிக்கிறது. என்னை விட மூத்தவர் எனக்குப் பிறகு சேர்ந்திருந்தால் அவர் எனக்கு ஜூனியர். ஒரே நாளில் சேர்ந்தாலும், என்னை விட ஒரு நாள் முந்திப் பிறந்தவர் எனக்கு சீனியர். நான் பிற்பகலில் சேர்ந்தேன் என்றால், முற்பகலில் சேர்ந்தவர் எனக்கு சீனியர். ஊழலில் ஊறித் திளைக்கும் அமைப்பில் சீனியாரிட்டி ஒரு பாதுகாப்பு என்ற கருத்து உண்மையே.
@ நீங்கள் எந்த பள்ளிக்கு, எந்த அலுவலகத்துக்கு, எந்த கட்சிக்கு, எந்த குழுவுக்குப் புதிதாகச் சென்றாலும், அங்கே நீங்கள் தொடக்க சிரமங்களை சந்தித்தேயாக வேண்டும். அங்கே ஏற்கனவே சிலர் சில லாபங்களை, வசதிகளை, சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அவை தவறானவையாக இருக்க வாய்ப்புண்டு. நீங்கள் அவற்றை தடுக்க, குறைக்க, கெடுக்க முயல்வதாக சந்தேகிப்பார்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அவர்களை அது சிறிதளவாவது பாதிக்கும். அவர்களை முழுக்க அரவணைத்து நீங்கள் செல்ல முடிவு செய்தால், குற்றங்களில் கூட்டாளியாக, பங்குதாரராக மாறலாம். நேரிய வழி நடத்தும் தலைவராக முடியாது.
@ இரண்டு பியூன்கள் தீவிரமாக வாக்கு வாதம் செய்து கொண்டிருந்ததை தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. யார் சீனியர், அடுத்த ப்ரமோஷனுக்கு யாருக்கு முன்னுரிமை என்பது பற்றி விவாதம் நடந்தது. வயது, பணியில் சேர்ந்த நாள், எட்டாம் வகுப்பு பாஸா இல்லையா, அதற்கு முன்பாகப் பணியாற்றியது நீர் கொணர்பவராகவா, காவலராகவா என்று எல்லா நுணுக்கங்களும் அலசப் பட்டன, பள்ளியிலும், DEO/CEO அலுவலகத்திலும் உள்ள அவர்கள் ஒரே நிலை, ஒரே ஊதியம் என்றாலும் இடையில் ஒரு பள்ளத்தாக்கே உண்டு. எந்த பணி நிலை என்றாலும் அதிகார மோகம் பலம் வாய்ந்தது என்பதற்காக சொன்னேன். இதில் பியூன் என்ன, பிரதமர் என்ன?
@ ஒருவருக்கு ஏராள அறிவிருக்கலாம். நிறைய திறமைகள் இருக்கலாம். நேர்மையானவராக இருக்கலாம். இவை எல்லாவற்றையும் விட அவர் யாருடைய சட்டைப் பைக்குள்ளாவது இருக்கிறாரா என்பது முக்கியமானது. அது அவருடைய தலைவிதியை நிர்ணயிக்கும். அவருடைய மனைவி, ட்ரைவர், மேலதிகாரி என்று தொடங்கி யாருடைய பையிலும் அவர் இருக்கக் கூடும்.
@ ஒரு எளிய ஊழியரில் தொடங்கி அதிகாரி, முதல்வர், பிரதமர், குடியரசுத் தலைவர் வரை யாருக்கும் இந்த சிக்கல் உண்டு. எடுத்துக் காட்டுகள் தேவையில்லாத அளவுக்கு அனைவரும் இதை அறிவார்கள். நான் முற்றிலும் சுதந்திரமானவன், யாரையும் நான் சார்ந்திருக்கவில்லை, என்று நம்பும் சிலர் ஒரு சட்டைப் பைக்குள் ஒரு நாள் கண் விழிக்கக் கூடும். அரிதாக சுதந்திர சிந்தனை உள்ளவர்களையும் மக்கள் எளிதாக நம்புவதில்லை. இளமையிலேயே மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
@ இரண்டு நெறிகள் உண்டு. எல்லோரையும் நம்ப வேண்டும். யாரையும் நம்பக் கூடாது. இந்த இரண்டு நெறிகளையும் பின்பற்ற வேண்டும். வேறு வழியில்லை. யார் வேண்டுமானாலும் நம்மை ஏமாற்ற முற்படலாம். கவனமாக இருப்பது நம் பொறுப்பு. யாரை நம்புகிறோமோ அவர்கள் தான் நம்மை ஏமாற்ற முடியும். ஒரு அறிஞர் “இறைவா, என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று. என் எதிரிகளை நானே பார்த்துக் கொள்வேன்” என்று வேண்டினார்.
@ நான் தலைமை ஆசிரியராக இருந்த போது தகுதியுள்ள மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க மிக ஆவலோடு இருப்பேன். ஒரு தகுதியுள்ள மாணவனுக்குக் கிடைக்க வேண்டிய அட்மிஷன், பரிசு, அங்கீகாரம் போன்றவற்றை சிபாரிசு போன்ற குறுக்கு வழிகளைக் கையாள்பவர்கள் ஹைஜாக் செய்து விடாமல் தடுக்க முயல்வேன்.
@ அட்மிஷனின் முதல் சில நாட்களிலாவது அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு தகுதி வரிசைப்படி அட்மிஷன் தர விரும்புவேன். பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட, பொது — எந்த இனமாக இருந்தாலும் அந்த மாணவர்களில் மிக அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கே முதல் கௌரவம் வழங்கப் பட வேண்டும். ஒரு பள்ளியில் இதற்காக நம்பிக்கைக்குரிய சில ஆசிரியர்களின் துணையோடு தகுதி வரிசைப் பட்டியல் தயாரித்தேன். முதல் நாளுக்குரிய எண்களை மட்டும் கார்டுகளில் குறித்துக் கொடுத்து தயார் செய்யச் சொன்னேன்.
@ என் கையெழுத்துக்கு கார்டுகள் வந்தன. மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே கையெழுத்திடும் போது ஒரு கார்டில் என் உள்ளுணர்வு உறுத்தியது. கார்டைக் கூர்ந்து கவனித்தேன். “இல்ல, இது என்னோட அஞ்சு இல்ல!” என்று உரக்கச் சொன்னேன். எல்லா ஆவணங்களையும் எடுத்து பார்த்த பின் நடந்தது என்ன தவறென்று புரிந்தது. உதவிய ஒரு நம்பிக்கைக்குரிய ஆசிரியர் தனக்கு வேண்டிய ஒரு மாணவனின் கார்டை மாற்றி வைத்து விட்டார். கார்டில் உள்ள ஐந்து அவர் போட்ட ஐந்து. என்னுடைய ஐந்து இல்லை. தகுதியின்படி வேறு மாணவருக்கு கார்டு அனுப்பினேன்.
@ ஒரு மாணவனுக்கு செய்யும் தவறான உதவி இன்னொரு தகுதியுள்ள மாணவனுக்கு செய்யும் அநீதியாகி விடும். அந்த ஆசிரியர் மேலும் தன் தவறை மறைக்க முயலாமல் என் அருகில் வந்து மெல்ல,”சாரி, சார்.” என்றார். புதிய தலைமை ஆசிரியர் பற்றி எல்லோருக்கும் அழுத்தமாகப் புரிய இந்த நிகழ்வு உதவியது. என்ன, தொடக்கத்திலேயே நம்மை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தால் நல்லது.
@ பிற்காலத்தில் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், “நீங்கள் கையெழுத்திடுவது ஏதோ ஒரு ஃபைலில், ஏதோ ஒரு தாளில் என்று நினைக்காதீர்கள். அது உங்கள் ராஜினாமாக் கடிதமாக இருக்கலாம். உங்கள் கழுத்தில் சுருக்கை மாட்ட நீங்கள் தரும் ஒப்புதலாக இருக்கலாம்” என்று சொல்வேன். பலர் கவனமாக இருந்தாலும் சிலர் சிக்கலில் மாட்டி சிரமப் படுவார்கள் — அறிவுரை சொன்னவர் உட்பட. குடும்பத்தில் யார் தவறிழைத்தாலும் குடும்பத் தலைவன் தான் சோகத்தை சுமக்க வேண்டும்.
@ ஊழை உப்பக்கம் காண முடியும் — அதை ஊழ் அனுமதித்தால். உப்பக்கம் காண்பதே ஊழாக இருந்தால். ஊழ் எதுவென்று யாரறிவார்? நூறு ஆண்டுகள் வாழ்வது எப்படி என்று புத்தகம் எழுதிய தமிழ்வாணன் அறுபத்தி சொச்சம் வயதில் மாரடைப்பால் இறந்தார். புயல் போன்ற ஏதோ ஒரு இயற்கைச் சீற்றம் அவருடைய மரணச் செய்தியை மூழ்கடித்தது இன்னொரு தீயூழ். கொரோனாக் கால மரணம் போல.
@ தினம் கண்களில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டிருப்பது நடக்கிற காரியமில்லை. தூங்கும் போதும் விழிப்பாக இருக்க முடியாது. கையெழுத்துப் போடும் முன்பு ஒவ்வொரு பக்கத்தையும் ஊன்றிக் கவனித்தால் ஒரு வேலையும் நடக்காது. பின் என்ன செய்வது? ஒரு தாளைத் திருத்தும் போது சில ஆசிரியர்கள் ஒரு பக்கத்தின் மீது வேகமாக கண்களை ஓட்டுவார்கள். தவறுகள் இருக்கும் இடங்களில் மட்டும் கண்கள் சரியாக நிற்கும். அதற்கு அனுபவம், நுண்ணுணர்வு, உள்ளுணர்வு, தொழில் நேர்த்தி என்று பல பெயர்கள் உண்டு.
@ பிறருக்குத் தொடக்கத்திலேயே நம் நெறிகளை தெளிவாக விளக்கலாம். தொடக்கத்தில் கவனமாக, விழிப்பாக இருக்கலாம். தொடக்கத்திலேயே நம்மை நிரூபிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நமக்கு அதிர்ஷ்டம் தான். (இந்த பாராவில் ‘தொடக்கத்தில்’ என்ற சொல்லை மூன்று முறை தெரியாமல் பயன் படுத்தவில்லை.) வாய்ப்பு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? வேறு வழியில்லை. நல்ல வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான்!

கட்டுரை எனக்கு நிரம்பப் பிடித்திருக்கிறது. நன்றி.
LikeLike
மிகவும் நன்றி,ஐயா!
LikeLike