”கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கக் கூடாதா?” – 3

எனக்கு கோபம் தலைக்கு ஏறியதற்கு நியாயமான காரணம் நிறைய உண்டு. வேறு யாராவது என் இடத்தில் இருந்தால் நடந்திருப்பதே வேறு. நானும் நிதான மூடில் ஒருவேளை  இல்லாதிருந்தால் வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆனால், பாவம் மேடம், என்றுதான் நான் நினைத்தேன்.

மேடம் சொன்னது சரிதானே என்று அவசரத்தில் சிலருக்கு தோன்றலாம். அப்படியில்லை. EMI ஏன் செலுத்தவில்லை, கணக்கில் ஏன் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பது போன்ற கேள்விகளில் பொருள் உண்டு. லாக்கர் ரென்ட் ஏன் செலுத்தவில்லை என்பது கிறுக்குத்தனமான கேள்வி. SMS சார்ஜ் ஏன் செலுத்தவில்லை, ATM வருடாந்தர சார்ஜ் ஏன் செலுத்தவில்லை என்பது போல. அவை நம்மால் செலுத்தப் படுபவை அல்ல; நம் கணக்கிலிருந்து வங்கியால் எடுத்துக் கொள்ளப் படுபவை. அதில் நமக்கு எந்த பொறுப்பும் இல்லை.

அந்த சின்ன விஷயம் மேடத்துக்கு தெரியாமல் இருக்க முடியாது. அவரிடம் இன்னும் சில பொறுப்புகளும் தரப் பட்டிருந்தன என்று பின்னர் தெரிந்தது. கணினியும் அவ்வப்போது கொட்டாவி விட்டது. சிலமுறை நெற்றியில் இரு விரல்களால் அவர் அழுத்திக் கொண்டது, நினைவை தூசு தட்ட இருக்கலாம் அல்லது கடும் தலைவலியால் இருக்கலாம். வீட்டுக்கு செல்ல ஆறு மணிக்கு ஓரிரு ஊழியர்கள் கிளம்பினர். இவருக்கு இன்னும்கூட அதிக நேரம் ஆகலாம். இறுதியாக வெளியேறுபவர் மேனேஜராக இருக்கும்.

மேடம் வீட்டுக்கு சென்ற பின் சோஃபாவில் சாய்ந்து சூடான காபியை அல்லது நொறுவையை அனுபவித்தவாறு ஓய்வு எடுப்பார் என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. மேடம் வீட்டில் ஒரு பெண்ணாக மாறி விடுவார். வங்கியை விட அதிக வேலைகள், சிக்கல்கள், முக்கியமான முடிவெடுத்தல்கள் அங்கு இருக்கலாம். இருக்கும். ஓய்வைக் கூட்டாமல் அதிக வேலையை மட்டும் வாங்கிக் கொள்வதில் அரசைப் போலவே, முதலாளிகளைப் போலவே கணவர்களும் கைகாரர்கள். சம்பள காந்தம் ஈர்க்காவிட்டால் பெண்களை இப்போதும் வெளியில் அனுப்ப தயங்குவோம்.

மேடத்தின் மீது எனக்கு வந்த கோபம் வந்த வேகத்திலேயே மறைந்தது. அத்தனை செவிகளையும் துளைக்க வேண்டிய சொற்களை ஏழாவது செவி கேட்காத அளவுக்கு மெதுவாக சொன்னேன். நெகிழ்ந்து போன அவர் மெல்லிய குரலில் “சாரி,சார்” என்றார்.

லாக்கர் வேலையை பார்த்தோம். வங்கி லாக்கர் மீது எங்கள் மகள்களுக்கு சிறு வயதில் பொறாமையும்,எரிச்சலும் இருந்தது. சீருடை அணிவதிலிருந்து விலக்கு கிடைக்கும் ஓரிரு பள்ளி நாட்களில் நகை அணிய கேட்பார்கள். நான் மறுத்து விடுவேன். காண மட்டும் முடியும், அணிந்து மகிழ  வாய்ப்பு இல்லாத ஏழைக் குழந்தைகள் மனது எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். சின்ன மோதிரம் கூட தருவதில்லை. வைத்திருப்போரின் பெருமை பக்கத்து வீட்டினரின் பொறாமை என்ற ஓனிடா டி.வி. வசனத்தை நான் ரசிப்பதில்லை.

வேறு ஒரு வேலைக்கும் அதே மேடத்திடம் செல்ல வேண்டியிருந்தது. நட்புடன் பேசினார். லாக்கருக்கு இரண்டு முறை எடுத்த வாடகை இரண்டு ஆண்டுகளாக எடுக்கத் தவறிய வாடகை எல்லாம் சரி செய்யப் பட்டன. ஆறு மணிக்கு வங்கியிலிருந்து கிளம்பினோம். வீட்டுக்கு வந்தபின் சற்று தாமதமாக பதிவுகளைப் போட்டேன். எல்லா பிரச்னைகளும் சரியாகி விட்டது – எங்களுக்கு. அவர்களுக்கு? நாளை மற்றுமொரு நாளே!

இரண்டு நாட்கள் கழித்து ஒரு sms வந்தது. ”உங்கள் லாக்கர் திறந்து பயன்படுத்தப் பட்டுள்ளது. அதை செய்தது நீங்கள் இல்லை என்றால் உடனே……….” தேதியைப் பார்த்தேன். வேறு தேதி. திறந்தது நான்தான். ஆனால் வேறு தேதியில். கதைகளில் இதயம் ஒரு நொடி நின்று  பின்னர் துடித்தது என்று வரும். (அதுதான் ஸ்ட்ரோக் என்பது.) உடனே தொடர்பு கொண்டு பேசினேன். “கவலை வேண்டாம். நீங்கள் இல்லாமல் வேறு யாரும் லாக்கரை திறக்க முடியாது” என்று ஆறுதல் சொன்னார்கள். சேர்த்து வைத்து குறுஞ் செய்திகளை கொத்தாக அனுப்பினார்கள் போல.

எங்கள் கல்வித் துறையில் இன்னும் மோசம். காலிப் பணியிடங்களை நிரப்புவதில்லை. எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஏற்பாடுகள்தான். மாணவர் திறன் மேம்பாட்டை ஒதுக்கி வைத்து விட்டு, புள்ளி விபரங்கள் தருவதே பெரிய கல்விப் பணியாகி தொடர்கிறது. அவற்றையும் மீண்டும் மீண்டும். ரிசல்ட் வந்தால் போதும். பிற எந்த கல்வி இணைச் செயல்பாடுகளைப் பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை. ரிசல்ட் வந்தால் மட்டும் போதும். மாணவருக்கு எழுத படிக்கவாவது தெரியுமா என்பது கேள்விக் குறி.

ஆசிரியரின் அத்தனை அஸ்திரங்களும் பறிமுதல் செய்யப் பட்டு விட்டன. அஸ்திரங்கள் அறியாமையின் மீது பாய்வதற்குப் பதில் சில நேரம் மாணவர் மீதே பாய்கின்றன என்பதால். குடுமி கூடாது என்ற அவசரத்தில் மொட்டை போட்டு விடுகிறோம்.

அதீதங்கள் ஆபத்து விளைவிக்கக் கூடியவை. ஒன்று, நமக்கு ஊழியர்களை கறாராக கண்காணிக்கத் தெரியாமல் அல்லது இயலாமல் சரியாக வேலை வாங்க முடியாமல் வீணாக்குவோம். அல்லது வரைமுறையின்றி கடுமையாகக் கசக்கிப் பிழிந்து வீணாக்குவோம். இரண்டும் தவறு.

சேர்த்து வைத்த புண்ணியங்கள் உட்பட எல்லாவற்றையும் இழந்து கையறு நிலையில் கிடக்கும் கர்ணனே மனதில் தோன்றுகிறது. தவறு செய்யும் எந்த மாணவரையும் கண்டிக்கவோ தண்டித்து திருத்தவோ வழியில்லை. வாளா இருத்தல் வாளால் புண்படுதலே.

இப்படியெல்லாம் உடலையும் மனதையும் புண்ணாக்கி வேலை பார்க்க வேண்டுமா? பெரும்பாலான ஊழியர்களுக்கு B.P. வராமல் இருந்தால் வியப்பு. புண்ணாக்குதல் தம்மையும் பிறரையும். வேலை அவசியம். பணம் அவசியம். வேலை பணத்தை மட்டும் தருவதில்லை. வேறு சிலதையும் தருகிறது. ஒருவேளை அரசு,”சம்பளத்தை சும்மாவே மாதம் தோறும் தருகிறோம். வேலைக்கு வர வேண்டாம்” என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? நான் உட்பட சிலராவது அதை மறுத்து விடுவோம்.

வேலை நமக்கு தன்னம்பிக்கையை,கௌரவத்தை,நிறைவை தர வேண்டும். வேலை ஆயுள் தண்டனையாக மாறி விடக் கூடாது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு வேலை இரட்டை ஆயுள் தண்டனை போல் ஆகி விட்டது. வேலை நம் சக்தியை உறிஞ்சி வெறும் சக்கையாய்த் துப்புகிறது. எண்பது வயது பாட்டி எங்களிடம், “கடப்படாத என்னை அப்பப்ப வந்து பாத்தா,என்ன?” என்று கேட்கிறார். “எங்களுக்கும் தான் உடம்பு சரியில்லை” என்று சொன்னால் அவர் நம்ப மாட்டார். “எனக்கும் மூட்டு வலி வந்து விட்டது” என்று மகள் அறிவிக்கிறார்.

முதலாளிகளின் வளர்ச்சிக்காக மிதமிஞ்சி உழைத்து பெறும் சம்பளத்தை வைத்து என்ன செய்கிறோம்? நுகர்வுப் பொருள்களை மித மிஞ்சி வாங்கிக் குவிக்கிறோம். தேவை இல்லாதவற்றையும். அதன் மூலம் முதலாளிகள் கோடிகளை மேலும் மேலும் குவிக்க முடிந்தவரை உதவுகிறோம். நமக்காக நாம் என்றாவது வாழ்கிறோமா? நுகர்வைத் தவிர நமக்கு வேறு என்ன தெரியும்? நம் வாழ்வில் என்றாவது நிறைவை அனுபவித்து இருக்கிறோமா? பொருள் குவிக்கத் தெரியாதவர்கள் வாழ்வெல்லாம் பொருளற்ற வாழ்க்கையா?

ஊழியர்களின் உழைப்பை பல விதங்களில் பெரு முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் உறிஞ்சுகிறார்கள் என்பது உண்மை. எல்லா காலத்திலும் சுரண்டல் உண்டு. சுரண்டல் முதலாளிகளின் தனி உடைமையில்லை. ஊழியர்கள் சுரண்டுவது இல்லையா? குடும்பத்தில் சுரண்டல் இல்லையா? நண்பர்களில்? அதிகார அரசியல்வாதிகளில்? முதலாளிகளாவது லாபத்தை மீண்டும் முதலீடு செய்வார்கள். வேலை வாய்ப்பு பெருகும். அரசியல்வாதிகளோ சுரண்டுவதை அப்படியே அயல்நாடுகளில் பதுக்கி விடுகிறார்கள். சுரண்டுபவர், சுரண்டும் விதம் காலம் தோறும் மாறிய வண்ணமே உள்ளது.

கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடாதா என்ற கேள்வியில் தவறே இல்லை. அதை மேடம் சொன்னதுதான் தவறு. அது நான் அவரை நோக்கி பேச வேண்டிய வசனம். அதை தவறுதலாக அவர் பேசி விட்டார். “எங்களோடு வயலுக்கு வந்தாயா? வரப்பு வெட்டினாயா?” என்ற வசனம் நன்றாக இருக்கலாம். அதற்காக அதை ஜாக்சன் துரை பேசுவதா? அப்படித்தான் ஆகிவிட்டது. மேடம் சொன்ன போது என் மனைவி சத்தமின்றி மெல்ல சிரித்தார். ஏன்?

நான் படிக்கும்போது சூழ்ந்துள்ள உலகை சிலநேரம் மறந்து விடுவேன். வெடித்து சிரித்து பிறகு சுற்றி நோக்கி அசடு வழிந்திருக்கிறேன். தேம்பி அழுது பிழிந்திருக்கிறேன். பக்கத்து மனிதர் பதற, கால்வலி வந்தது போல் நடித்து ஓரளவு சமாளித்ததும் உண்டு. எழுதும்போதோ இன்னும் மோசம். மனைவி வந்து ஏதாவது சொல்வார். நிமிர்ந்து, ”யார் இந்த அம்மையார்?” என்பது போல் பார்ப்பேன். பின் தெளிந்து, “நீ சொன்னதை மறுபடியும் சொல்லு?” என்பேன். “அது இல்லை, அதுக்கும் முன்னால என்னமோ சொன்னியே அதை” என்று பிரகாஷ் ராஜ் போல கேட்பேன்.

ஒருநாள் எழுதும்போது அவர் டீ டம்ளரை அருகில் வைத்தார். “மறந்துடாதீங்க” என்ற சொல்லுடன். எழுதும் போதையில் நான் டீயை சுத்தமாக மறந்து விட்டேன். நினைவு மீண்ட போது டீ ஆறிக் கிடந்தது. இன்னும் சற்று நேரம் காத்திருந்தால் கோல்டு டீயே கிடைக்கும். ”எழுதிகிட்ருக்கேன்ல, டீ ஆறிப் போய்டும்னு செத்த ஞாபகப் படுத்னா என்ன? கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கக் கூடாதா?”என்றேன். சொல்கிற முக்கியமான விஷயங்கள் எல்லாம் மறந்து விடும். இந்த மாதிரி சின்ன விஷயம் மட்டும் அவர்களுக்கு தெளிவாக நினைவு இருக்கும்.

”அவந்தான் குடியகாரப் பய. மூக்கு முட்டும் குடுச்சுட்டு வந்து வம்பு இழுக்குறான். நீ ஏன் அவங்கிட்ட சரிக்கி சமமா பதில் சொல்லிகிட்டு நிக்கிற? திட்னா திட்டிட்டு போறான்னு விடு. நீயும் பேசனுமா? குடிக்காத நீ கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க வேணாமா?”

“அவந்தான் படிக்காத முட்டாளு. ஏதோ தப்பு பண்ணிட்டான். நாலெழுத்து படுச்ச நீ இப்புடி பேசலாமா? விட்டுத் தள்ளு. ஒரு உத்தியோகத்துல இருக்குற நீதான் கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும். நீதான் எறங்கி வரணும். நீதான் கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கணும்.”

கோபம் வருமா இல்லையா? இப்போது எது தப்பாகிப் போனது? படித்ததா, வேலை பார்ப்பதா, குடிக்காமல் இருப்பதா? எது தவறு? என்ன நியாயம் இது? பொறுப்பாக நடக்க வேண்டும் என்று தவறு செய்தவர்களுக்குத் தானே சொல்ல வேண்டும்?

பொறுப்பேற்றுக் கொள்ளுதல் மிக உயர்ந்த பண்பு. எல்லோராலும் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது. அதற்கு சில தகுதிகள் வேண்டும். அதை எல்லோரிடமும் எதிர் பார்க்கவும் முடியாது. சுதந்திரமாக இயங்க விரும்பும் யாரும் பொறுப்பேற்க மறுக்க முடியாது.

(நிறைவு)

”கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கக் கூடாதா?” — 1

”கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கக் கூடாதா?” — 2

@@@@@@@@

Categories அனுபவம்

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close