வாழ்த்துக்கள்,அருண்மொழி!

@ அருண்மொழியைப் பற்றி அறியாதவர்கள் இருந்தால் அவர் பற்றி பின்னர் சொல்கிறேன்.முதலில் அவர் செய்த மகத்தான சாதனை பற்றியும்,இறுதியில் அவருக்கு நன்றியையும் சொல்வேன். எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் தொடங்கிய “ஆயிரம் மணி நேர வாசிப்பு சவால்” போட்டியில் எனக்கு அடுத்ததாக  ஆயிரம் மணி நேரத்தை அருண்மொழி  இரண்டாவதாக வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கி றார்.

@ வெளி நாடுகளில் வாழும் தமிழர்களும் இதில் கலந்து கொள்வதால் இது ஒரு சர்வதேசப் போட்டி என்றும் சொல்லலாம்.சுனீல் இதைத் தொடங்கும் போது முதல் வாசிப்பு நிறைவு ஒரு ஆண்டு காலத்தில் நிகழலாம் என்று எதிர்பார்த்ததாக ஒரு முறை குறிப்பிட்டார். அருண்மொழி அந்த எதிர்பார்ப்பை சரியாகவே நிறைவேற்றி இருக்கிறார்.நான் தான் ஒரு அவசரக் குடுக்கையாக ஐந்து மாதங்க ளிலேயே நிறைவு செய்து விட்டேன்.

@ நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் நிகழ்வது  போலவே தொடங்கும் போது முன் பகுதிகளில் ஓடிக் கொண்டு இருந்தவர்களே இலக்கைத் தொடும் பகுதியிலும் முன்னே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.தொடக்க நாட்களில் நான் பத்தாம் இடத்திலும்,அருண்மொழி பதிமூன்றாம் இடத்திலும் இருந்தோம்.அப்போது சீனிலேயே தென்படாத சரவணக்குமார் இப்போது ஆறாம் இடத்திலும், பாலசுப்பிரமணியன் எட்டாம் இடத்திலும் இருக்கிறார்கள்.பின்னால் தொடங்கினாலும் கூட யாரும் முன்னால் வர முடியும்.முத்து காளிமுத்து என்ற வாசகர்  மார்ச் மாதம் முதல் தான் தன் கணக்கைத் தொடங்கினார்.இப்போது   87 மணி நேர வாசிப்பைக் கடந்து முன்னேறு கிறார்.கடைசி நேரத்தில் கூட இடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வியக்க வைத்துள்ளன.

@ என் 1000 மணி நேர வாசிப்பு சென்ற செப்டெம்பர் மாதம் நிறைவடைந்த பிறகு என் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கும் போது அப்போது தான் புதிதாக போட்டியில் இறங்கியதாக நான் கற்பனை செய்து கொண்டேன்.நான் புதிது என்பதால் என் போட்டியாளர்கள் எல்லோருமே என்னை விட முன்னால் இருந்தனர். அதிக பட்சம் 400 மணி நேரம் முன்னதாக.எல்லோரையும் மீண்டும்  முந்த வேண்டும் என்று முடிவு செய்தேன்.ஒவ்வொருவராக முந்துவது எனக்கு த்ரில் அனுபவமாக இருந்தது.தீவிர இலக்கியம் வாசிக்கையில் போனசாக ஒரு த்ரில்லர் அனுபவம்!

@ புதிதாக ஒரு ரேங்க் லிஸ்ட் தயாரித்தேன்.அதில் கடைசியாக நான் இருந்தேன்.பின் ஒவ்வொருவராக ஓவர்டேக் செய்தேன்.இவ்வளவுக்கும் முன்பு போல் வேகம் கிடையாது.முன்பு ஒரு நாளில் ஏழு மணி நேர வாசிப்பு என் சராசரி வேகம்.இப்போது ஐந்து மணி நேரம் மட்டுமே. கொஞ்சம் கூடும்,குறையும்.எளிதாக முன்னேர முடிந்தது. இரண்டரை மாதங்களில், நவம்பர் இறுதியில் எட்டாம் இடத்தில் இருந்தேன்.டிசம்பர் இறுதியில் நாலாமிடம்.பிப்ரவரி தொடக்கத்திலேயே இரண்டாமிடத் துக்கு வந்து விட்டேன்.

@ மீண்டும் முதல் இடத்துக்கு வந்து விடலாமா என்று நினைத்தேன். அருண்மொழி 1000 முடிப்பதற்குள் நாம் 2000 முடித்து விடலாமா? Then I thought better of it. அவருடைய சாதனையை அது கௌரவிப்பதாகாது என்று தோன்றியது.

@ இன்னொன்றையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.இதில் Tough Fight  யாருமே யாருக்குமே கொடுக்கவில்லை.ஒரு போட்டியில் இருக்க வேண்டிய வெல்லும் வெறி– Killer Instinct, மன்னிக்க வேண்டும், மிகச் சிலரிடம் தான் கண்டேன். அல்லது எல்லோருமே நிஷ்காம கர்ம யோகம் பயிலும் யோகிகளாக இருக்க வேண்டும்.

@ வாசிப்பு என்னும் ஒரு (கிட்டத் தட்ட) தவத்தை நான் ஒரு மதிப்பெண் துரத்தும் போட்டியாகக் குறைத்து விட்டதாக என் மீது குற்றம் சாட்டப் படாது என்று நினைக்கிறேன்.நிறைய வாசிப்புக்கும்,தரமான வாசிப்புக்கும் இப் போட்டி உதவும் என்பதே எனக்கு இதன் மீதுள்ள மரியாதை.தானே இயல்பாக நடைபெறும் ஒரு செயலை இது மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.எல்லாமே பாவனைகள்தானே?

@ வாசிப்பு நேர அளவை பதிவு செய்யும் கூகிள் தாளில் என்ன வசதிகள் உள்ளன என்று தொடக்க மாதங்களில் எனக்குத் தெரியாது.இப்போதும் கூடத்தான்.அதில் பிறருடன் எண்ணம் பரிமாறிக் கொள்ளலாம் என்று தெரிந்த பின் ஏதாவதொரு நூறைக் கடந்தவருக்கு வாழ்த்து சொல்லத் தொடங்கினேன்.பின்னர் அதை என் தினசரிக் கடமைகளில் ஒன்றாக்கிக் கொண்டேன்.வாழ்த்துவது எனக்கு நானே வரித்துக் கொண்ட பொறுப்பு. சிலர் எனக்கு நன்றி சொல்வார்கள்.சிலர் சொல்வதில்லை.அருண்மொழிக்கு சுமார் முன்னூறிலிருந்து ஒவ்வொரு நூறு கடக்கையிலும் வாழ்த்து தெரிவிப்பேன்.அவர்கள் எல்லாம் அவற்றைப் பார்க்கவே இல்லை என்று நினைக்கிறேன்.சிலருக்காவது வாழ்த்து உற்சாகத்தைத் தந்திருக்கும்.ஒரு பெண் நான் வாழ்த்திய பிறகு வாசிப்பதையே (அல்லது வாசிப்பை பதிவு செய்வதையே) நிறுத்தி விட்டார்.சுநீல்,என்னை மன்னிக்க வேண்டும்.

@ வாசிப்பை அதிகரிக்க உதவும் எல்லா போட்டிகளும்,முயற்சிகளும் வரவேற்கத் தகுந்தவையே.பாசம் மீதூர்ந்து இறுக்கி அணைக்கையில் குழந்தை மூச்சு திணறி எந்த அசம்பாவிதமும் ஆகி விடக் கூடாது. ஏற்கனவே ICU வில் கிடக்கும் தமிழ் தீவிர வாசிப்பை விதிகளின் பிரவாகம் முடிவு நோக்கி விரைவு படுத்தி விடலாகாது.

@ ஒரு பெண் வாசிப்பதைப் பார்க்க நேரும் பலரும் திகில் அடைகிறார்கள். “கல்யாண மாலை”யில் வாசிக்கும் பெண் வேண்டும் என்று இதுவரை யாரும் கேட்டதில்லை.வாசிப்பில் ஆண்கள் சந்திக்கும் இடர்களை விட பல மடங்கில் பெண்கள் சந்திக்கிறார்கள்.இந்த சூழலில் அருண்மொழியின் சாதனை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.அது பெரிதும் கொண்டாடப் பட வேண்டியது.

@ சுமார் நூறு வாசகர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இரண்டு பேர் 700 மணியையும்,இரண்டு பேர் 600 மணியையும்,இரண்டு  பேர் 500 மணியையும்,ஒருவர் 400 மணியையும்,எட்டு பேர் 300 மணியையும்,ஆறு பேர் 200 மணியையும்,13  பேர் 100 மணியையும்,இருவர் 1000 மணியையும், கடந்து வாசித்துக் கொண்டுள்ளனர்.

@ 1000 மணி நேர வாசிப்பு சவாலில் முதல் பத்து இடங்களில்  உள்ளவர்களின் பட்டியல்:  (07-04-2020 காலை நிலவரப்படி)

இடம்                 பெயர்                                மணி                                            ……………..         ——————-                 ———–

1.     சாந்தமூர்த்தி ஜெகனாதன்    1979

2.    அருண்மொழி நங்கை              1000

3.     ராதா. V                                                 760

4.     லாவன்யா                                         750

5.     சுரேஷ் பிரதீப்                                 694

6.     சரவணக்குமார்                             636

7.     கமலாதேவி                                      520

8.     பாலசுப்ரமணியன்.  A                500

9.     சௌந்தரராஜன்.வ                      446

10.      சுஜா                                                    383

@ அருண்மொழி மட்டுமல்ல,நிறைய பெண்மணிகள் இந்த வாசிப்பு வேள்வியில் முன்னணியில் இருக்கிறார்கள்.முதல் பத்து இடங்களில் பாதி இடங்களை பெண்கள் வென்றுள்ளனர்.முதல் ஐந்து இடங்களில் மூன்றில் பெண்கள்தான்.மூன்றாம் இடத்தில் அமெரிக்காவில் வாழும் ராதா இருக்கிறார்.இவரும் ஒன்பதாம் இடத்தில் உள்ள இவரது கணவர் சௌந்தரராஜனும் அமெரிக்காவில் ஆளுக்கொரு புத்தகத்துடன் வாசிப்பில் ஆழ்ந்திருக்கும் காட்சி எவ்வளவு அழகாக இருக்கும்!

@ அருண்மொழி நங்கை சிறந்த வாசகர் மட்டுமல்ல.வாசித்த சிறந்த நூல்களைப் பற்றி நன்றாக விமர்சனக் கட்டுரைகளும் எழுதுபவர்;  இலக்கிய மேடைகளில் பேசுபவர்.கணவரோடு அடிக்கடி வெளிநாடு களுக்குப் பயணம் மேற்கொள்பவர்.  கும்பகோணத்தில் பிறந்தவர். தமிழின் முதன்மை எழுத்தாளரின் மனைவியாகத் திகழ்பவர்.

@ ஆம்.அருண்மொழி நங்கை ஜெயமோகனின் மனைவி. 1000 மணி நேர வாசிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அவருக்கு என் வாழ்த்துக்கள்!ஒரு பெரும் எழுத்தாளருக்கு மனைவியாக இருப்பது பெரும் பொறுப்பு.பொதுவாக பொறாமைப்பட இயலாத பொறுப்பும் கூட. ஜெயமோகனை ஜெயமோகனாக இனிது வாழ அனுமதித்த மைக்கும், அவர் மேன்  மேலும் ஜெயமோகனாக மேம்பட உதவி வருவதற்காகவும் அருண்மொழிக்கு நன்றி!

@ இன்னும் நான்கு நாட்களில் 2000 மணி நேரத்தை நான் இறையருளுடன் நிறைவு செய்து விடுவேன்.அதற்கு கட்டுரை எழுதுவதாக இல்லை.ஏனென்றால் 2000 பெரிதல்ல.1000 பெரிதா,2000 பெரிதா? அதிலென்ன சந்தேகம்? 1000 தான் பெரிது!15 ஆண்டுகளுக்கு முன் “500 பெரிதா,5000 பெரிதா?” என்று ஒரு கட்டுரை எழுதினேன்.அதில் 500 தான் பெரிது என்று நிரூபித்திருந்தேன்.ஆனால் 1000,2000 இவற்றை விட 10,000 பெரிது.மேலிட அனுமதி கிடைத்தால் 10,000 மணி நேர நிறைவுக்கு கட்டுரை எழுதுவேன். (‘மேலிடம்’ என்ற சொல் சில நாட்களாக அண்ணாவை நினைவூட்டுகிறது!)

@ சக வாசிப்புப் போட்டியாள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னுடைய மூன்றாவது இன்னிங்க்ஸில் உங்களை மீண்டும் மூன்றாவது முறையாக முந்த வேண்டிய சங்கடமான நிலைக்குள் என்னைத் தள்ளி விடாதீர்கள்.அதற்கு முன் 1000 மணி நேர வாசிப்பை நிறைவு செய்து விடுங்கள்.நன்றி.

தொடர்புள்ள கட்டுரைகள்:

1.எனக்குத் தேவை இரண்டாமிடம் கூட அல்ல! https://wp.me/patmC2-3G

2.கரும்பு தின்னும் போட்டியில் முதல் பரிசு:https://wp.me/patmC2-5h

3.வாசிப்பு தவம் நிறைவு!  https://wp.me/patmC2-5z

Categories அனுபவம், நூல் வாசிப்பு

1 thought on “வாழ்த்துக்கள்,அருண்மொழி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create your website with WordPress.com
Get started
%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close